தூங்காத இரவுகள் தரும் துயரம்

தூங்காத இரவுகள் தரும் துயரம்
நன்றி - அ. உமர் பாரூக்
நம்மைச் சுற்றி ரசாயனப் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும் போது நம்மை நாம் எவ்வாறு பாதுகாப்பது. ஒவ்வொரு உணவாக ஆய்வு செய்து அதிலிருக்கும் ரசாயன நஞ்சுகளை அறிந்து கொண்டு நாம் என்னதான் செய்வது.
இயற்கை நம் உடலிற்கு வழங்கியுள்ள, ரசாயனங்களை அழிக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி நாம் உண்ணும் உணவுகளின் நச்சுக் கலப்பிலிருந்து நம்மை காக்கலாம். உடலிற்குள் வரும் ரசாயனங்களை கண்டுபிடித்து அவற்றை நீக்கும் வேலையை செய்யும் கடவுள் யார் தெரியுமா... கல்லீரல் தான்.

குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று மற்றும் உணவின் வழியாக உடலுக்குள் நுழையும் ரசாயனங்களை அழிக்கும் சக்தி படைத்தது தான் கல்லீரல். உடலின் ராஜ உறுப்புகளில் ஒன்றான கல்லீரலை இப்போது இருப்பதை விட இன்னும் பல
மடங்கு பலத்தோடு வைத்துக் கொண்டால் தானே நஞ்சுகளில் இருந்து தப்ப முடியும். அதற்கான வழிமுறைகள் எதுவும் இருக்கிறதா என்றால், நம் முன்னோர்கள் கடைபிடித்த முறையான வழி அது. ரசாயனங்களை அழிப்பதற்கான உடலியல் வழிகள் பல இருந்தாலும் முக்கியமானது... - சரியான நேரத்தில் துாங்குவது.
இரவுக் காவலன்
சரியான நேரம் என்றால் ஏன்ன. இயற்கையின் இயக்கம் துாங்குவதற்கென்றே சில மணி நேரங்களை விதித்துள்ளது.
துாங்குவதற்கும் கல்லீரலுக்கும் என்ன தொடர்பு?
தொடர்ந்து துாங்காமல் இருக்கும் போது உடல் மொத்தமும் சோர்வடைகிறது. யோசிக்கிற, பேசுகிற அனைத்து விஷயங்களிலும் மனம் நிலைகொள்ளாமல் தத்தளிக்கிறது. உடலை, மனத்தை புத்துணர்வளித்து புதுப்பிக்கும் வேலை தான் துாக்கத்தின் போது நடைபெறுகிறது.
பகல் உழைப்பதற்கான நேரமாகவும், இரவு துாங்குவதற்கான நேரமாகவும் அறியப்படுகிறது. இந்த நவீன காலத்தில் இரவு முழுக்க வேலை செய்யும் உழைப்பாளர்கள் பெருகியிருக்கிறார்கள்.
இரவு 10 மணிக்கு படுத்து காலை 5 மணி வரை உறங்குவதற்குப் பதிலாக, அதே ஏழு மணி நேரத்தை பகலில் துாங்கினால் என்ன... என்பது நம்மில் பெரும்பாலோரின் கேள்வியாக இருக்கிறது. அப்படி ஒரு நாள் இரவு முழுவதும் விழித்திருந்து விட்டு பகலில் எட்டு மணி நேரம் கூட துாங்கிப் பாருங்கள். இரவு துாங்காத சோர்வு, பகல் துாக்கத்தால் நீக்கப்படுவதில்லை. ஒரு இரவுத் துாக்கத்திற்கு பல நாள் பகல் துாக்கமும் ஈடாகாது.
அப்படி என்னதான் இரவுத் துாக்கத்தில் இருக்கிறது?
துாங்குவது இயற்கை விதி
மரபுவழி அறிவியலில் மொத்த உயிரினங்களையும் இரண்டாகப் பிரிக்கிறார்கள். இரவில் துாங்குபவை...- இரவில்- துாங்காதவை. இரவில் துாங்க வேண்டிய உயிரினங்கள் துாங்காமல் இருந்தாலும், துாங்கக் கூடாத உயிரினங்கள் துாங்கினாலும், அது இயற்கை விதி மீறல். இரவில் சரியாக துாங்காவிட்டால் உடலின் சமநிலை பாதிக்கப்பட்டு உடலில் கழிவுகள் தேங்கிவிடுகின்றன.
இரவில் துாங்காத உயிரினங்களுக்கு உதாரணம் நாய், பூனை போன்ற விலங்குகள். இவற்றின் கண்களில் இரவில் ஒளி பட்டால், ரேடியம் நிறம் போலக் காட்சியளிக்கும், எதிரொளிக்கும். இந்த கண்களில் 'டேப்டம் லுாசிடம்' என்ற சிறப்புப் பொருள் உண்டு. மனிதர்களின் கண்களில் இந்த சிறப்புப் பொருள் இல்லை. எனவே நாம் அவசியமாக இரவில் துாங்க
வேண்டியவர்கள் என்பது இயற்கை விதி.
நஞ்சை நீக்கும் நல்லவன்
இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் உடலில் கல்லீரல் தொகுப்பு சிறப்பாக வேலை செய்கிறது என்று, சீன மரபுவழி மருத்துவம் (அக்குபங்சர்) கூறுகிறது. உடலின் ஒவ்வொரு உறுப்பும் எப்போதும் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறது. சில நேரங்களில் சில உறுப்புகள் சிறப்பு வேலையைச் செய்யும். கல்லீரலின் பொதுவான வேலை, இதிலிருந்து சுரக்கப்படும் பித்தநீர் செரிமானத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.
எஞ்சிய குளுக்கோசை, கிளைக்கோஜனாக மாற்றி சேமிக்கிறது. இதைத் தாண்டி, நம் ரத்தத்திலுள்ள நச்சுக்களை அகற்றும் மாபெரும் பணியை செய்கிறது.
நம்முடைய கல்லீரல் மட்டும் முழுமையாக பழுதடைந்தால், ரத்தத்திலுள்ள ரசாயன நச்சுக்கள் ஓரிரு நாட்களில் நம்மைக் கொன்றுவிடும். அந்த அளவிற்கு நாம் பயன்படுத்தும் உணவுகள் இருக்கின்றன. நம் எதிர்ப்பு சக்தியின் அடிப்படை வேலைகளை செய்வது கல்லீரல்தான். நச்சுக்களை அகற்றும் இந்த வேலையை, இரவில் செய்கிறது கல்லீரல்.
இரவு 11 மணிக்குத் துவங்கி அதிகாலை 3 மணி வரையில் நச்சுத்தன்மை அகற்றும் பணி நீடிக்கிறது. பகலில் நாம் உண்ணும் உணவுகளை ஜீரணிப்பது முதல் பலவகையான வேலைகள் நடக்கிறது.
துாக்கமும் குளுமையும்
இரவின் குளிர்ச்சியும், சூழலும் கல்லீரலின் இந்த இயக்கத்திற்கு அவசியம். கர்ப்பப்பை இருட்டில் என்ன விதமான சூழல் நிலவுகிறதோ, அதே மாதிரியான சிறப்புத்தன்மை வாய்ந்தது தான் இரவின் சூழலும்.
இரவுச் சூழலில் உடலின் நச்சுக்களை அகற்றி செல்களுக்கு புத்துயிர் அளிக்கிறது. உயிருள்ள ஒவ்வொரு அணுவும் பகலை விட இரவுகளில் தான் வளர்ச்சி அடைகிறது. இரவுச் சூழலில் மிக அதிகமான மாற்றங்களை ஒவ்வொரு உயிரணுவும் சந்திக்கிறது. இரவுகளில் துாங்குகிறவர்களுக்கு தான் மேற்கண்ட வளர்ச்சிக்கான மாற்றங்களும், நச்சுத்தன்மை அகற்றமும் முழுமையாக நடைபெறுகின்றன.
துாங்குவதில் வேறென்ன விஷயங்கள் இருக்கின்றன. துாங்கி விழிக்கும் போதுதான் அத்துாக்கம் முழுமையானதாக இருந்ததா இல்லையா என்பதை உணரமுடியும். எழும் போது உடல் கனமாகவும், சோர்வுற்றும் இருந்தால் உடலின் இரவுப் பணிகள் இன்னும் முழுமையாக நடைபெறவில்லை என்பதைக் குறிக்கிறது.
எழும் போது சுறுசுறுப்பாகவும், நாம் செய்யப் போகிற வேலைகள் பற்றிய சிந்தனைகளோடும் இருப்பது நல்ல துாக்கத்தின் விளைவு.
உடலுக்கு வலிமை தரும் துாக்கம், ஹார்மோன் பராமரிப்பையும் மேற்கொள்கிறது. தீர்க்க முடியாதது என்று ஆங்கில மருத்துவம் அறிவிக்கிற நோய்களில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பல நோய்கள் ஹார்மோன் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களால் வருபவை. இந்த ஹார்மோன் சுழற்சியின் பராமரிப்பை நம் துாக்கம்தான் துவங்கி வைக்கிறது.
ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது
இரவில் நாம் துாங்கும் போது, கண்களின் குளிர்ச்சியாலும் -இரவின் குளிர்ச்சியாலும், மூளையின் அருகிலிருக்கும் பீனியல் சுரப்பி துாண்டப்படுகிறது. இதிலிருந்து மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரந்து, உடலின் பல வேலைகளுக்கு காரணமாக அமைகிறது. உடலின் ஹார்மோன்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக இயங்குவதில்லை.
உதாரணமாக அட்ரினலின் ஹார்மோன் சுரந்தால் இன்சுலின் சுரக்காது. பிட்யூட்டரியின் டி.எஸ்.ஹெச். ஹார்மோன் சுரந்தால் தான் தைராக்சின் ஹார்மோன் சுரக்கும். இப்படி ஒன்றை ஒன்று சார்ந்த சுழற்சிதான் ஹார்மோன்களின் இயக்கம். இந்த சுழற்சியில் இரவுத்துாக்கத்தின் போது சுரக்க வேண்டிய மெலட்டோனின் சுரக்கவில்லை என்றால், படிப்படியாக மற்ற ஹார்மோன்களின் சுரப்பிலும் மாறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு.
அதெல்லாம் சரி. மெலட்டோனின் இரவில் தான் சுரக்குமா.1950 களில் கண்டுபிடிக்கப்பட்ட சிர்கேடியன் உடல் கடிகாரத்தின் படியும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான மரபுவழி அறிவியலின், உடலியல் விதிகளின் படியும் உண்மை தான். இரவு 11 மணிக்கு நாம் துாங்கிக் கொண்டிருந்தால் மட்டுமே பீனியலில் இருந்து மெலட்டோனின் சுரக்கும்.
ஹார்மோன் சுழற்சியை ஒழுங்காக வைத்துக் கொள்ளவும், ரசாயன நஞ்சுகளில் இருந்து தப்புவதற்காகவும் நம்மிடம் உள்ள வலுவான ஆயுதம் துாக்கம். நம்மை காக்கும் கடவுளான கல்லீரலை காப்பாற்ற, முறையாக துாங்குவோம்.
இதை எழுதிய கம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சர்,முதல்வர் திரு.அ. உமர் பாரூக், அவர்களுக்கும் அதை வெளியிட்ட ”தினமலர்” நாளிதழுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்
நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.
இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே அக்குஹீலர்களாகிய எங்களின் நோக்கம்.

Comments

Popular posts from this blog

The Cancer Dies When You Eat These Five Foods, It’s Time To Start Eating Them

Childhood poverty linked to brain changes related to depression

MEDITATION ON BREATHING