`வலிமை' ரிலீஸ் தள்ளிப்போகிறதா? பொங்கல் ரேசில் குதிக்கிறதா விஷாலின் `வீரமே வாகை சூடும்'?
முன்பு கொரோனா பரவல் இருந்தபோது, அஜித் எடுத்த முடிவினால்தான் 'கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகு படத்தை ரிலீஸ் செய்து கொள்ளலாம்' என 'வலிமை'யின் ரிலீஸை அறிவிக்காமல் இருந்தது படக்குழு.
ஒமைக்ரான் பரவி வருவதன் காரணமாக திரையரங்குகளில் ஐம்பது சதவிகித இருக்கைகளுக்கே அனுமதி என்பதாலும், சில மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதாலும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவேண்டிய படங்களில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதன் காரணமாக வருகிற 7ம் தேதி வெளியாகவிருந்த ராஜமௌலியின் 'RRR' படத்தை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
இந்தச் சூழலில் அஜித்தின் 'வலிமை' திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகுமா என்ற கேள்வி கோடம்பாக்கத்தில் எழுந்திருக்கிறது.
முன்பு கொரோனா பரவல் இருந்தபோது, அஜித் எடுத்த முடிவினால்தான் 'கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகு படத்தை ரிலீஸ் செய்து கொள்ளலாம்' என 'வலிமை'யின் ரிலீஸை அறிவிக்காமல் இருந்தது படக்குழு. "இப்போது ஐம்பது சதவிகித இருக்கைகள் என்பதால், வசூலை குவிப்பதில் சிக்கல் வரலாம். அதனால் பட ரிலீஸ் தள்ளிப்போகும்" என்ற பேச்சும் உலாவுகிறது. இன்னொரு பக்கம் விஷாலின் 'வீரமே வாகை சூடும்' ஜனவரி 26ம் தேதியன்று வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அது 'வலிமை'யுடன் போட்டி போடவிருக்கிறது என்றும் தகவல் கசிகிறது.
இதுபற்றி திரையரங்கு உரிமையாளார்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினோம்.
"போன வருஷமும் இதே போல மாஸ்க் அணியணும், ஐம்பது சதவிகித இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்ற சூழல் இருந்துச்சு. அப்பவும் படங்கள் வெளியாகத்தான் செய்தன. இன்னைக்கு காலையிலதான் 'வலிமை' டீமோட பேசினோம். திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் பண்றதுல உறுதியா இருக்காங்க. இதுவரை எந்த மாறுதலும் இல்லை. ஒருவேளை 'வலிமை' வெளியாகாமல் போனால் விஷாலின் படம் பொங்கலுக்கு வெளியாக தயாராக இருக்கிறது. அதே சமயம், அஜித் படம் வெளியானால், விஷாலின் படம் ஜனவரி 26 அன்று வெளியாகும்" என்றார் அவர்.
Comments
Post a Comment